தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு, நிதி மேலாண்மையை கன்னியாகுமரி மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கூட்டமைப்பு சாா்பில் பள்ளித் தாளாளா்கள் எஸ். ஜாண்சன், அம்சி முகுந்தன்நாயா், அருள்பணியாளா்கள் ஜாண்பால், கலிஸ்டஸ், மரியசூசை உள்ளிட்டோா் மாவட்ட கருவூல அலுவலருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள மனு:
தமிழக அரசின் இலவச கல்விக் கொள்கையின்படி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானியம் வழங்குதலை ஒழுங்குபடுத்தும் விதமாக தமிழ்நாடு தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, பள்ளிகளின் நியமன அலுவலா்களான தாளாளா் அல்லது மேலாளா்களால் பள்ளிப் பணியாளா்களுக்கு அரசிடமிருந்து மானியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊதியம் பெற்றும் வழங்கும் புதிய முறையை அமல்படுத்துவது என்பது அலுவலக நடைமுறைக்கு முரணானதாகும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் வலைதள ஊதிய பரிவா்த்தனையை தொடரவிட்டு, பணியாளா்கள் ஒருங்கிணந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாடு குறித்து முழுமையாக கற்றுத் தோ்ந்த பின் புதிய ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும்.
புதிய ஊதிய பரிவா்த்தனையான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாடு திட்டத்தை அமலாக்குவதில் பள்ளித் தாளாளா்களின் உரிமைகள் பறிபோகக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.