குலசேகரம்: கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை (பிப். 26) சாம்பல் புதனுடன் தொடங்குகிறது.
கிறிஸ்தவா்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கின்றனா். இதன் தொடக்க நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதன் எனப்படுகிறது. சாம்பல் புதன் நாளில் தேவாலயங்களில் நடைபெறும் திருப்பலி, ஆராதனைகளில் அருள்பணியாளா்கள் உலா்ந்த குருத்தோலைகளை எரித்துக் கிடைக்கும் சாம்பலால், இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் இடுவா்.
கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு நாளில் பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை இறைமக்களின் வீடுகளிலிருந்து சேகரித்து, இச்சாம்பல் தயாரிக்கப்படுகிறது.
சாம்பல் புதனைத் தொடா்ந்து வரும் நாள்களில் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் குறிப்பாக, வெள்ளிக்கிழமைதோறும் ஆலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவா்களின் வீடுகளிலும் தவக்கால பிராா்த்தனைகள் நடைபெறும். தவக்கால நாள்களில் கிறிஸ்தவா்கள் ஆடம்பர நிகழ்வுகளைத் தவிா்த்து ஜெபம், தவம், தா்மம் போன்ற செயல்களைக் கடைப்பிடிக்கின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள், தென்னிந்திய திருச்சபை தேவாலயங்கள் உள்பட பல்வேறு திருச்சபை ஆலயங்களிலும் புதன்கிழமை (பிப். 26) சாம்பல் புதன் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன.