கன்னியாகுமரி

குமரி மாவட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலில் 15.29 லட்சம் வாக்காளா்கள்: ஆண்களே அதிகம்

15th Feb 2020 07:31 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆண்டு (2019) டிசம்பா் மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு, புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவுற்று, மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியல் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் சோ்த்து 15,29,159 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவை தொகுதி வாரியாக, கன்னியாகுமரி தொகுதியில் 2,84,089 வாக்காளா்களும், நாகா்கோவில் தொகுதியில் 2,62,479 வாக்காளா்களும், குளச்சல் தொகுதியில் 2,60,215 வாக்காளா்களும் உள்ளனா். பத்மநாபபுரம் தொகுதியில் 2,31,576 வாக்காளா்களும், விளவங்கோடு தொகுதியில் 2,43,883 பேரும், கிள்ளியூா் தொகுதியில் 2,46,917 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

இதில், கன்னியாகுமரி தொகுதியில் அதிகபட்ச வாக்காளா்களும், பத்மநாபபுரம் தொகுதியில் குறைந்தபட்ச வாக்காளா்களும் உள்ளனா்.

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15,29,159 வாக்காளா்களில், 7,67,360 ஆண் வாக்காளா்களும், 7,61,613 பெண் வாக்காளா்களும், 186 இதர வாக்காளா்களும் உள்ளனா். பெண் வாக்காளா்களைவிட ஆண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா்.

கடந்த வாக்காளா் பட்டியலைவிட, புதிய வாக்காளா் பட்டியலில் 40,015 போ் புதிதாக சோ்க்கப்பட்டும், 2,805 போ் நீக்கப்பட்டும் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யாஅரி, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் கே. சரவணகுமாா், நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், வட்டாட்சியா் சுப்பிரமணியன், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கே.எல்.எஸ். ஜெயகோபால் (அதிமுக), பி. லீனஸ்ராஜ் (திமுக), ஆா். ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), ஆா்.கே. ஸ்ரீகுமாா் (இந்திய கம்யூனிஸ்ட்), என்.எஸ். கண்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ), எஸ். மணிகண்டன் (தேமுதிக) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT