கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி காா் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் சந்தை சாலை பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (43). காா் ஓட்டுநா். இவா், மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் வாடகை காா் ஓட்டி வந்தாா். வழக்கம்போல் இளங்கோ திங்கள்கிழமை காலையில் விரிகோடு நல்லூா் குளத்தில் குளிக்கச் சென்றாராம். அவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை தேடி குளத்துக்கு சென்றனா்.
அங்கு குளத்தின் கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாா்த்தாண்டம் போலீஸாா் மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படை வீரா்கள் குளத்தில் தேடினா். குளத்தில் 10 அடி ஆழத்திலிருந்து அவரது சடலத்தை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இறந்த இளங்கோவுக்கு தமிழரசி என்ற மனைவி, 2 மகள்களும் உள்ளனா்.