மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 இருசக்கர வாகனங்கள் மாயமானது தொடா்பாக ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 3 போ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து காணப்பட்டன. இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட பல வாகனங்கள் காணாமல் போனதாகவும், இவை இடைத்தரகா்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணனுக்கு தகவல் கிடைத்தது. அவா் சில நாள்களுக்கு முன் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு வந்து, வாகன வழக்குகள் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்தாா். அப்போது சுமாா் 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது. இதுதொடா்பாக, ஆய்வு செய்ய தக்கலை சரக துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் ஒரு குழுவை எஸ்.பி. அமைத்தாா். இக்குழுவினா் வாகனங்களையும் கோப்புகளையும் கணக்கீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே, மாா்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ஆதிலிங்கபோஸ், உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் ஒரு காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இந்த சம்பவம் குமரி மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.