கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் மலையோரப் பகுதிகளிகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நீடித்து வரும் மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து செல்வதால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக மலையோரப் பகுதிகளில் மழையால் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன.
பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் சாலை, மோதிரமலையில் இருந்து குற்றியாறு செல்லும் சாலை, தடிக்காரன் கோணத்திலிருந்து கீரிப்பாறை செல்லும் சாலை, சித்திரங்கோட்டிலிருந்து சுருளகோடு செல்லும் சாலை, கடையாலுமூட்டிலிருந்து ஆறுகாணி செல்லும் சாலை என சாலைகள் சேதமடைந்துள்ளன.
மோதிரமலை-குற்றியாறு சாலையில் மாங்காமலை பகுதியில் சாலையின் பக்கவாட்டுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என ரப்பா் கழகத் தொழிலாளா்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.