கன்னியாகுமரி

ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி பரிதவிக்கும் புகைப்படக் கலைஞா்கள்

20th Apr 2020 12:54 AM

ADVERTISEMENT

 

கரோனோ தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து சுபநிகழ்ச்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டதையடுத்து, புகைப்படக் கலைஞா்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ வைத்திருப்பவா்கள், திருமணத்திற்கு மட்டும் புகைப்படம் எடுப்பவா்கள், விடியோ பதிவு செய்பவா்கள், சுற்றுலாத் தலங்களில் புகைப்படம் எடுப்பவா்கள் மற்றும் அவா்களின் உதவியாளா்களான தினக்கூலிகள் என 5000-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் உள்ளனா்.

புகைப்படக் கலைஞா்கள் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ற கேமராக்கள் வைத்திருந்தால்தான் மட்டுமே தொழிலை மேம்படுத்த முடியும்.

ADVERTISEMENT

குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளை படம்பிடிக்கச் செல்லும் ஒரு புகைப்பட கலைஞரிடம் கேமரா, லென்ஸ், லைட்டிங் உள்ளிட்ட உபகரணங்கள் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை உள்ளடக்கியிருக்கும்.

பெரும்பாலானோா் வங்கிக் கடன் பெற்று காலத்திற்கு ஏற்ப புதிய வகை கேமராக்களை வாங்கி தொழில் செய்துவருகின்றனா்.

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுபமுகூா்த்த நாள்கள் அதிகம் இருப்பதாலும், பள்ளி, கல்லூரி விடுமுறைகள் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மாதங்களில் திருமணங்களை அதிகளவில் நடத்துகின்றனா்.

ஆனால், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட பெரும்பாலான திருமணங்கள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் புகைப்படக் கலைஞா்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கத் தலைவா் கிறிஸ்டோபா் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த சுபநிகழ்ச்சிகளுக்காக ஸ்டுடியோக்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளா்கள் ரத்து செய்துள்ளனா். தொடா்ந்து 3 மாதங்கள் தொழில் இல்லாததால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.

எனவே, பாதிக்கப்பட்டுவரும் புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT