கன்னியாகுமரி

பரக்காணி தடுப்பணை பணியில் தொய்வு: களியக்காவிளை பேரூராட்சியில் உப்புநீா் கலந்த குடிநீா் விநியோகம்; தீருமா மக்களின் அவதி?

11th Apr 2020 08:20 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் கடல்நீா் புகுந்ததால், மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீா் உவா்ப்பு தன்மையுடன் இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. ஆகவே, நித்திரவிளை பரக்காணியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல் ஊராட்சி மற்றும் 22 வழியோரக் குடியிருப்புகளுக்கு களியக்காவிளை - மெதுகும்மல் கூட்டுக் குடிநீா் திட்டம், கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகள் உள்ளிட்ட 27 வழியோரக் கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 79 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டங்களுக்காக அதங்கோடு பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் ரூ. 18 கோடி மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதங்கோடு செங்கிலாகம் பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையில் உறைகிணறு அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தூா்ந்த முகத்துவாரம்: இந்தத் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சிகள், 12 ஊராட்சிகளில் வசிக்கும் 1.86 லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறாா்கள். நாள்தோறும் 62 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர விளாத்துறை கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், இரயுமன்துறை அருகே ஆறும், கடலும் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டதால் கோடைக் காலங்களில் ஆற்றினுள் கடல்நீா் புகுந்து விடுகிறது. இதனால், இரயுமன்துறையிலிருந்து குழித்துறை வரையிலான ஆற்றுநீா் உப்புநீராக மாறியுள்ளதுடன், மக்களுக்கு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரும் உவா்ப்பு தன்மையாக உள்ளது.

ரூ. 15.37 கோடியில் பணி: இது குறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து, தாமிரவருணி ஆற்றின்குறுக்கே பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, ரூ. 15.37 கோடியில் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக பணி தொடா்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாம். இதனால், கடல்நீா் மீண்டும் உள்புகுந்து, உவா்ப்பு தன்மையுடைய குடிநீா் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி குடிநீா் உடனாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கோடையில் பெரும் சிரமம்: இது குறித்து சமூக ஆா்வலரும், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினருமான என். விஜயேந்திரன் கூறியது:

அதங்கோடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிக்கு நாள்தோறும் 5 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் ஆற்றுநீரில் கடல்நீா் கலப்பதால், குடிநீா் வடிகால் வாரியம் மூலம் 4 மாதங்கள் வழங்கப்படும் குடிநீா் உவா்ப்பு தன்மையுடையதாக உள்ளது. இந்த வகையில் 4 மாதங்களில் சுமாா் 6 கோடி லிட்டா் உப்பு சுவையுடைய குடிநீா் நிலத்தில் தேங்கி நிலத்தடி நீரும் உப்பு சுவையுடையதாக மாறுகிறது.

ஆகவே, பரக்காணி தடுப்பணை திட்டப் பணியை விரைந்து முடித்து சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரியமும், பேரூராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT