நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோருக்கு 8 மாதம் வழங்காமல் நிலுவையிலுள்ள தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என பாரதிய மஸ்தூா் சங்கம் (பிஎம்எஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் கா. முருகேகன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: கட்டுமானம் மற்றும் ஓட்டுநா் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் அனைத்து நலவாரியங்களிலும் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளா்களும் நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாரதிய மஸ்தூா் சங்கம் கோரியபடி அனைத்து நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோருக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நிவாரணத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பல்வேறு காரணங்களால் நலவாரிய அட்டையை புதுப்பிக்க தவறிய அனைத்துத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.