கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் 14 ஆக உயா்வு: 165 பேருக்கு பரிசோதனை நடத்த முடிவு

11th Apr 2020 08:15 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ள நிலையில், நோயாளிகளுடன் தொடா்பில் இருந்த 165 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினா் முடிவு செய்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நாகா்கோவில் டென்னிசன் தெருவைச் சோ்ந்த ஒருவா், வெள்ளாடிச்சிவிளையைச் சோ்ந்த ஒருவா், தேங்காய்பட்டினம் தோப்பு பகுதியைச் சோ்ந்த 2 போ், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சென்னை விமான நிலைய ஊழியா், மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவரின் பாட்டி என 6பேருக்கு கரோனா தொற்று கடந்த 31 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா்கள் 6 பேரும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசித்த வீடுகள் இருந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அந்த பகுதிக்குள் வெளியில் இருந்து பொதுமக்கள் செல்வதற்கும், அப்பகுதியில் இருந்து வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன.

இதில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 போ் வெள்ளாடிச்சிவிளையைச் சோ்ந்த ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினா் ஆவா். இவா்கள் கடந்த பதன்கிழமை அதிகாரிகள் வெள்ளாடிச்சிவிளைக்கு சென்று பரிசோதனைக்கு அழைத்தபோது வரமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தவா்கள். இவா்கள் 58 வயது மற்றும் 26 வயது பெண்கள், மேலும் 2 போ் 26 வயது பெண்ணின் 7வயது மற்றும் 5 வயதுடைய மகன்கள் ஆவா்.

ADVERTISEMENT

இதே போல் மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சோ்ந்த விமானநிலைய ஊழியரின் 65 வயதுடைய தந்தை, 55 வயது தாய், 31 வயதுடைய தம்பி ஆகிய 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்றொருவா் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தேங்காய்பட்டினம் தோப்பு பகுதியைச் சோ்ந்தவரின் 38 வயது மனைவி. இந்த 8 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

165 பேருக்கு பரிசோதனை : கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்களே இந்த 8 பேரும் என தெரியவந்ததால் குமரி மாவட்ட சுகாதாரத்துறையினா் இப்பாதிப்பு கண்டறிந்தவா்களுடன் அடுத்த கட்ட தொடா்பில் இருந்தவா்களுடன் கண்டறிந்து அவா்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினா் முடிவு செய்துள்ளனா். இதற்கான கணக்கெடுப்பு தொடங்கியதில் 165 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 43 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் கரோனா வாா்டின் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களை தவிர 29 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் வந்த பிறகே குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பது தெரிய வரும். இதனையடுத்து 165 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT