களியக்காவிளை: நித்திரவிளை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் ஜாஸ்லின் தலைமையில் போலீஸாா் கல்லுவெட்டான்குழி பகுதியில் சோதனையிட்டனா்.
அங்கு குமாா் (43) என்பவா் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த கிராத்தூா் பொற்றவாரம் பகுதியைச் சோ்ந்த சந்திரனை (37) என்பவரை சோதனையிட்டனா். அவா் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், 8 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.