கன்னியாகுமரி

கடற்கரையை பாதுகாக்க சமூக காடுகள் உருவாக்க வேண்டும்

22nd Sep 2019 12:17 AM

ADVERTISEMENT


கடற்கரையை பாதுகாக்க சமூக காடுகளை உருவாக்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலர் பாதிரியார் சர்ச்சில் குறிப்பிட்டார்.
உலக கடலோரத் தினத்தையொட்டி குளச்சல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர், மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது, சர்ச்சில் பேசியது: கடற்கரையை  அழிவில் இருந்து பாதுகாக்க  உலக கடலோரத் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3 ஆவது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. 
நெகிழி, குப்பைகள், ஆலை கழிவுகளால் கடற்கரை மாசுபட்டு வருகின்றது.  2018 இல் இத்தினத்தில் உலகம் முழுவதும் 1மில்லியன் கடற்கரை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து கழிவுகளை கடற்கரையிலிருந்து தூய்மைப்படுத்தினர். 
நிகழாண்டு கடற்கரையை சுத்தப்படுத்த அதிகளவில் ஆர்வலர்கள் முன் வந்துள்ளனர். எனவே, கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிக கழிவுகளை கடற்கரையிலிருந்து தூய்மைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று உலகளவில் 90 நாடுகளில் கடல் சார் ஆர்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முற்காலத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு நூல், கயிறுகளால் செய்யப்பட்ட வலைகள்பயன்படுத்தினர். அவை நாளடைவில் மண்ணோடும், கடலோடும் மக்கிப் போனது. ஆனால் தற்போது மீனவர்கள் நெகிழி, நைலானால் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். அவை மக்காமல் இருக்கின்றன. 
கடற்கரையில் அமைந்துள்ளஆலைகள், அனல் மின்நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மற்றும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுகளும் கப்பல் துறைமுகங்களில் கப்பலில் இருந்து வெளியேறும் கழிவுகளும் எண்ணெய் கழிவுகளும் கடற்கரையை மாசுபடுத்துகின்றன. 
எனவே கடற்கரையை காப்பாற்ற பாரம்பரிய மீனவர்களும், கடல் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளும் தார் மீக பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கடற்கரை பகுதியில் நெகிழி பயன்பாட்டுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கடற்கரையில் சமூக காடுகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர். 
முன்னதாக மாணவர்கள் கடற்கரையை தூய்மையாக பராமரிப்பது குறித்து உறுதிமொழி ஏற்றனர். மாணவர் காளிதாசன் முன்னிலை வகித்தார். மாணவி அபியா வரவேற்றார். மாணவர், மாணவிகள் கடற்கரையில் இருந்து நெகிழிப் பொருள்கள், பழைய துணிகள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT