புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்கள் முறையே அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு, பெருமாள் ஆகிய தெய்வங்களுக்குசிறப்பு வழிபாடு நடத்தும் மாதங்களாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகர்கோவில் வடிவீஸ்வரத்திலுள்ள இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் அதிகாலையில் நிர்மால்ய பூஜை, தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கையில் உள்ள மதுசூதனபெருமாள் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், தீபாராதனையை தொடர்ந்து உச்சிகால பூஜை ஆகியவை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன்கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில், தோவாளை கிருஷ்ணசுவாமி கோயில், கோட்டாறு வாகையடி ஏழகரம் பெருமாள் கோயில் உள்பட இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.