கன்னியாகுமரி அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த சிலுவை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய டல்லஸ் (42). இவர், கன்னியாகுமரியில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிளஸ் 2 பயிலும் மகன், 10 ஆம் வகுப்பு பயிலும் மகள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட மரிய டல்லஸ், ஓராண்டுக்கு முன்பு மனைவியைத் தாக்கிய வழக்கில், அவர் கைதாகி 15 நாள்கள் சிறையில் இருந்தாராம். பின்னர், குடும்பத்தினர் சமரசம் பேசியதை தொடர்ந்து அவர், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்ற மரிய டல்லஸ், போதையில் மனைவியை அடித்து கல்லால் தாக்கினாராம். இதில் ரத்த காயத்துடன் மயங்கி கீழே விழுந்த அருள் சுனிதாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, எஸ்.பி. பாஸ்கரன், காவல்ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் விசாரணை நடத்தினர். கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து மரிய டல்லஸை கைது செய்தனர்.