கன்னியாகுமரி

தேன் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் பாஸ்கரன் தகவல்

7th Sep 2019 07:31 AM

ADVERTISEMENT

தேன் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்.
தேங்காய்பட்டினம்  அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தினை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி
 ந.தளவாய்சுந்தரம் முன்னிலையில்  வெள்ளிக்கிழமை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்.  பின்னர் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் பேசியது;  கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு ஒரு முக்கியமான தொழில் ஆகும்.  மார்த்தாண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1200 க்கும் மேல் விவசாயிகள் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 
தேங்காய்ப்பட்டினம் அருகிலுள்ள அம்சியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ரூ.17   லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு,  அங்கு ரூ. 9.59 லட்சத்தில், நவீன இயந்திரம்  மூலம் தேன் பதப்படுத்தப்பட்டு வருகிறது.
இயந்திரம் மூலம் பதப்படுத்தப்படும் இத்தேன் தரமானதாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  எனவே, தேன் கொள்முதல் விலையினை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேன் பதப்படுத்தும் நிலையத்திற்கு ஒரு கிட்டங்கியும், ஒரு பகுப்பாய்வு கூட கட்டடமும்,  ஒரு ஆழ்குழாய் கிணறும் ரூ. 25.39 லட்சத்தில்  கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தின் திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு,  ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 800 சதுர அடியில் புதிய பணிக்கூடம் ஒன்று கட்டப்பட்டு, அதில் ரூ.13.61 லட்சம் மதிப்பில் 500 கிலோ திறன் கொண்ட அதி நவீன தேன் பதப்படுத்தும் மற்றும் தானியங்கி தேன் நிரப்பும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது என்றார் அவர்.  தொடர்ந்து, அம்சியில் தேன் வளர்ப்போரின் தேனீ பெட்டிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் நாகர்கோவிலில்  அமைச்சர் ஜி.பாஸ்கரன், ந.தளவாய்சுந்தரம்  ஆகியோர் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை தலைமை செயல் அலுவலர் சி.நடராசன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர்  முன்னிலையில் தேன் உற்பத்தியை பெருக்குவது மற்றும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 கூட்டத்தில் சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்)சரண்யா அரி, அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜான்தங்கம், உதவி இயக்குநர் (கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்) ல.சுதாகர் அரசு அலுவலர்கள், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT