கன்னியாகுமரி

புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

4th Sep 2019 09:40 AM

ADVERTISEMENT

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுறுத்தினார். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் தலைமை வகித்து,  முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் விவரங்களை கேட்டறிந்ததுடன்,  பிரச்னைக்குரியவற்றுக்கு ஆலோசனையும் வழங்கினார். மேலும், நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமெனவும், பழுதடைந்த சாலைகளை துரிதமாக சீரமைக்கவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளைஅகற்றவும், பழுதடைந்த மின் கம்பி மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்து,  மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தினார்.
இதுதவிர, நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடை பணிகள், குறிப்பாக, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வாட்டர் டேங்க் சாலை வழியாக பேலஸ் சாலை வரை 380 மீட்டர் புதை சாக்கடை பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் கட்டட பராமரிப்புப்   பணிகள் உள்ளிட்டவற்றை மழைக்காலத்துக்குள் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.  கால்நடை  பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையின் மூலம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையிலுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஏ.ஆர்.ராஹுல்நாத், சார் ஆட்சியர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்) ஷரண்யா அரி(பத்மநாபபுரம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித் துறை (நீர்வளம், கட்டடம், மின்சாரம்), குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், தேசிய நெடுஞ்சாலைத் துறை, ஊராட்சி, பேரூராட்சி மற்றும்  அனைத்து துறை  அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT