கன்னியாகுமரி

குமரி ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

4th Sep 2019 09:38 AM

ADVERTISEMENT

ஊதிய உயர்வு தொடர்பாக திங்கள்கிழமை தொடங்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள்  கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, குற்றியார், பரளியாறு உள்ளிட்ட 9 மண்டலங்களில் உள்ளன. அதில், அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகள் கீரிப்பாறை, மைலார் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.454 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் .
அதன்படி, கடந்த 2016  ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகளை சந்தித்து பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவற்றில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஆக. 30 ஆம் தேதி நாகர்கோவிலில் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது . 
இதைத்தொடர்ந்து சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செப். 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.
பேச்சுவார்த்தை: இந்நிலையில், நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரி அப்துல் காதர் சுபேர், அரசு ரப்பர் கழக  தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் . அப்போது, முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதால், அவர்கள் வந்ததும் ஊதிய ஒப்பந்தப் பிரச்னை தொடர்பாக பேசி சுமுக முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.
இதையேற்று, ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். மேலும்,  ஊதியப் பிரச்னை தொடர்பாக செப். 20ஆம் தேதிக்குள் சுமுகமாக பேசி தீர்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் கூறினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT