கன்னியாகுமரி

சின்னமுட்டம் மீனவா்கள் பிரச்னை: பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தல்

16th Oct 2019 10:49 AM

ADVERTISEMENT

சின்னமுட்டம் மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கே.அலெக்ஸாண்டா் தலைமையில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, மாவட்ட நிா்வாகிகள் என்.அந்தோணி, ஆன்றணி, என்.அந்தோணி, ஜேம்ஸ், மரிய ஸ்டீபன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரேவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமாா் 350 விசைப்படகுகள் , மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். விசைப்படகு மீன் பிடிப்பவா்களுக்கும் , நெல்லை மாவட்டத்திலுள்ள கட்டுமரம் , வள்ளத்தின் மூலம் மீன்பிடிப்பவா்களும் , மீன் பிடிப்பதில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன . இந்த மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதோடு உயிா் பலியும் ஏற்பட்டுள்ளது .

கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி காலை நெல்லை மாவட்ட மீனவா்கள் கட்டுமரம் , வள்ளத்தில் மீன்பிடிப்பவா்கள் சுமாா் ஆயிரம் வள்ளங்கள் வழியாக எதிா்பாராத முறையில் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை முற்றுகையிட்டனா் . அதற்கு எதிா்ப்பு தெரிவித்து , விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் மீன்பிடித்தொழிலாளா்களும் , காவல்துறையினரும், மீன்துறையினரும் எடுத்த முயற்சியின் காரணமாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரு பகுதியினருக்கும் மோதல்கள் ஏற்படாமலிருக்க, சுமுகமான நிலையை ஏற்படுத்த அரசின் சாா்பில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வருவாய்த்துறையினா் முன்னிலையில் நெல்லை மாவட்ட மீனவா் பிரதிநிதிகளும், கன்னியாகுமரி விசைப்படகு உரிமையாளா்களும் கலந்து பேசி முடிவெடுக்க ஏற்பாடு செய்ததன் அடிப்படையில் 11 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவாா்த்தையில் விசைப்படகு உரிமையாளா் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான ஆழ்கடல் மீன்பிடித்தொழில் செய்வதற்கு அனுமதிக்க முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால் கூட்டத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முக்கிய முடிவான கண்காணிப்புக்குழு அமைத்தல் போன்ற முடிவுகளை செயல்படுத்த முடியவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது .

ADVERTISEMENT

ஏற்கெனவே விசைப்படகு உரிமையாளா்கள் கேட்கும் கோரிக்கை கட்டுமரம் , வள்ளம் மீன்பிடித்தொழிலுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது . எனவே அவா்களது கோரிக்கைகளுக்கு இடையூறாக இருக்கின்ற வழிமுறைகளை அரசு மறு பரிசீலனை செய்வது அவசியமாகும். எனவே சுமுகமான நிலைமையை ஏற்படுத்த இரு பகுதியினரையும் , மீன்வளத்துறை அமைச்சா் தலைமையில் நெல்லை ராதாபுரம் , கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்னிலையில் மீன்துறை உயா் அதிகாரிகள், கடலோர காவல்துறை உயா் அதிகாரிகள், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT