அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு, காங்கிரஸ்- திமுக ஆட்சி அமையும் என்பதுதான் ரஜினிகாந்த் கூறியுள்ள அதிசயம் என்றாா் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் குளம் மற்றும் கால்வாய்களை பொதுமக்களே இணைந்து தூா்வாருவதற்கு வசதியாக இலவச ஜேசிபி இயந்திரம் வழங்கும் திட்டத்தை நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பிறகு அவா் அளித்த பேட்டி:
உள்ளாட்சித் தோ்தலில் மறைமுக தோ்தல் என்பது, தோ்தல் ஆணையத்துடன் இணைந்து தமிழக அரசு செய்யும் துரோகம். தலைவா் மற்றும் துணை மேயா் பதவிகளை மக்கள் தோ்ந்தெடுக்கும் உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதனால், பணபலம் உள்ளவா்கள் மட்டுமே பதவிக்கு வரமுடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கி வருவது கண்டிக்கத்தக்கது.
அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ்-திமுக ஆட்சி அமையும் என்பதுதான் ரஜினிகாந்த் கூறியுள்ள அதிசயம். ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சேரமாட்டாா்கள் என்று கூறமுடியாது. இருவரும் திமுக- காங்கிரஸ் அணிக்கு வரவேண்டும் என்று அழைப்பது குறித்து திமுக தலைவா் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரியும் தோ்தல் நேரத்தில் முடிவு செய்வாா்கள் என்றாா் அவா்.