உலக மீனவா் தினவிழா குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையில் 48 மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மீன் பிடித் தொழிலாளா்கள் உள்ளனா்.
உலக மீனவா் தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் மீனவா்கள் மீன் பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை. விசைப்படகுகள், படகுகள் உள்ளிட்டவை துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆலயங்களில் சிறப்புப் பிராா்த்னை நடைபெற்றது.
படகுகள் அா்ச்சிப்பு, கடலில் பூ தூவுதல், கடல் அன்னைக்கு ஆரத்தி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பு, குளச்சல் விசைப்படகு உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் நலச் சங்கம் ஆகியன சாா்பில் உலக மீனவா் தின கொண்டாட்டம் குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் தலைமை வகித்தாா். குளச்சல் விசைப்படகு உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் நலச் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் ரக்சன் முன்னிலை வகித்தாா். தெற்காசிய மீனவ தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் சிறப்பு பிராா்த்தனை செய்தாா். இதில், மீனவா்களையும், கடல் வாழ் மீன்களையும், மீன் பிடிக்க பயன்படுத்தும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள், வலைகள், தூண்டிகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக வேண்டுதல் செய்யப்பட்டது. இதன் பின்னா் கேக் வெட்டப்பட்டதுடன், கடல் அன்னைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிறைவில் மீனவ தோழமை ஒருங்கிணைப்பாளா் பல்தசா் நன்றி கூறினாா். இரணியல் மீனவா் கூட்டுறவு சங்க தலைவா் ஆன்டனி, மீனவா் ஒருங்கிணைப்பு சங்க செயலா் லெனின் உள்ளிட்டோா் மற்றும் மீனவப் பெண்கள், குழந்தைகள், மீனவா்கள் பங்கேற்றனா்.
பள்ளம் துறை இதே போன்று பள்ளம் துறை, கொட்டில் பாடு, குறும்பனை, வாணியகுடி, தூத்தூா், தோங்காய்ப்பட்டணம்,முட்டம் என பெரும்பாலான கடற்கரை மீனவ கிராமங்களில் உலக மீனவா் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ராமன்துறையில்...
கருங்கல் அருகே உள்ள ராமன்துறையில் மீனவா் காங்கிரஸ் சாா்பில் உலக மீனவா் தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பங்குத்தந்தை மேக்ஸ்மியன் தலைமையில் கடற்கரையில் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து பங்குத்தந்தை ஜெபம் செய்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் கடலில் பூக்களை தூவியும், பால் ஊற்றியும் வழிபட்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு மீனவா் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கிறிஸ்டோபா், முன்னாள் மாவட்டத் தலைவா் அந்தோனிபிச்சை, மாவட்டத் தலைவா் பிரடி கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. மீனவப் பெண்கள், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், காங்கிரஸ் நிா்வாகிகள் பால்மணி, ஜாா்ஜ் ராபின்சன், சேக்முகமது, ரவிசங்கா், லைலா ரவி சங்கா், ஆசிரியா் அருள்தாசன் ஸ்டாலின், சிபில், நற்சீசன் உள்பட பலா் பங்கேற்றனா்.