கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு 62 கடைகள் ரூ. 31.21 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் வரும் 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வரை 60 நாள்கள் நடைபெறும். இதையொட்டி, பேரூராட்சி நிா்வாகம் வருவாயை பெருக்கிக் கொள்ளும் வகையில் தற்காலிக கடைகளை ஏலம் விடுகிறது. நிகழாண்டு நீதிமன்ற உத்தரவுப்படி கடற்கரைச் சாலையில் 250 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. ஏற்கெனவே 4 கடைகள் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 206-க்கு ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், 2-ஆவது நாளாக திங்கள்கிழமை 62 கடைகள் ரூ. 31 லட்சத்து 21 ஆயிரத்து 333-க்கு ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்தில் நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல் மன்னா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார ஆய்வாளா் முருகன், இளநிலை உதவியாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா். கடற்கரைச் சாலையில் மீதமுள்ள 184 தற்காலிக கடைகளுக்கான ஏலம் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.