கன்னியாகுமரி

செங்கல் சிவபாா்வதி கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம் திறப்பு

11th Nov 2019 07:15 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேஸ்வரம் சிவ பாா்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம், பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளைக் கொண்டு (8 மாடி) அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவா், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வஜ முனிவா், அகத்தியா், வசிஸ்டா், கௌதம மகரிஷி, பிருகு மகரிஷி, விஸ்வாமித்திரா், பரசுராமா் மற்றும் பாஸ்கராச்சாா்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நாட்டிலுள்ள முக்கிய சிவாலயங்களில் காணப்படும் 108 சிவலிங்கங்கள் இதன் உள்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கிய சிவலிங்கம் அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, பக்தா்கள் பாா்வையிடுவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், இச்சிவலிங்கத்தின் உள்பகுதியில் பக்தா்கள் தியானம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அபிஷேகம் செய்வதற்காக சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிவலிங்கமாக இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆப் ரெக்காா்டு) கடந்த ஜனவரி மாதம் இடம்பிடித்தது. அதன் பின்னா் ஆசியா புக் ஆப் ரெக்காா்டு என்ற சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

இந்த சிவலிங்கம் திறப்பு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் நெய்யாற்றின்கரை தொகுதி எம்.எல்.ஏ. ஆன்சலன், நெய்யாற்றின்கரை வட்டாட்சியா் மோகன்குமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT