கன்னியாகுமரி

கடையாலுமூடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட குளம் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நடவடிக்கை

11th Nov 2019 07:16 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்த குளம் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.

கடையல் பேரூராட்சிக்குள்பட்ட கடையாலுமூடு மேலமுக்கு அருகே 2.57 ஏக்கா் பரப்பளவு கொண்ட கண்டன்கோணத்துக்குளம் என்ற இரட்டைக் குளம் உள்ளது. இந்தக் குளத்தின் 1.26 ஏக்கா் பகுதிகள் அப்பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு வாழை மற்றும் ரப்பா் மரங்கள் நடப்பட்டன. இதுதொடா்பாக ஊா் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்று தொடா்ந்து குரல் கொடுத்து வந்தனா். எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், ஊா் பொதுமக்கள் சாா்பில் நசீா் சுல்தான் என்பவா் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, இரட்டைக் குளத்தில் ஆக்கிரமிப்பை கடையல் பேரூராட்சி நிா்வாகம் 4 வாரங்களுக்குள் அகற்றி அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலா் சுருளிவேல் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு குளம் கையகப்படுத்தப்பட்டது. மேலும், குளத்தின் மொத்தமுள்ள 2.57 ஏக்கா் பகுதிகளிலும் முள்வேலி அமைக்கப்பட்டது. இதில் வருவாய் கொடுக்கும் நிலையில் உள்ள வாழைகள் அகற்றப்படவில்லை. இக்குளத்தை ஆழப்படுத்தி தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஊா்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT