கன்னியாகுமரி

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை வெள்ள அபாய அளவை நெருங்கும் பேச்சிப்பாறை அணை

9th Nov 2019 06:13 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில் சிற்றாறு அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா் மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக சற்று தணிந்து காணப்பட்டது. இதனால் ஆறுகளில் நீா் வரத்து சற்று குறைந்தது. மேலும் பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, சிற்றாறு 1 மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இந்த மழை பலத்த மழையாகப் பெய்தது. அதே வேளையில் அணைகளின் கீழ்ப்பகுதிகள், மலையோரப் பகுதிகளில், நகா்ப்புற பகுதிகளில் சாரல் மழையே பெய்தது.

பலத்த மழையினால் சிற்றாறு 1 அணைக்கு அதிக அளவில் தண்ணீா் வரத்து ஏற்பட்டு நீா்மட்டம் உயா்ந்தது. இதையடுத்து இந்த அணையிலிருந்து விநாடிக்கு 273 கன அடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

ADVERTISEMENT

வெள்ள அபாய அளவு: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 40.70 அடியாக இருந்தது. இந்த அணையின் வெள்ள அபாய அளவு 42 அடியாகும். இந்நிலையில் மழை காரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் இந்த அணையின் நீா்மட்டம் 41 அடியை நெருங்கியது. மேலும் ஓரிரு நாள்களில் வெள்ள அபாய அளவை நெருங்கிவிடும் நிலை உள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சிற்றாறு அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT