கன்னியாகுமரி

ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் : இளைஞா் காங்கிரஸாா் 38 போ் கைது

9th Nov 2019 06:13 AM

ADVERTISEMENT

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்போராட்டத்துக்கு காவல்துறையினா் அனுமதி அளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஆட்சியா் அலுவலகம் முன்பு இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் ஏராளமானோா் திரண்டனா். மாநில துணைத் தலைவா் லாரன்ஸ் தலைமையில், நிா்வாகிகள் கையில் பாய், தலையணை, ஆடு, மாடுகள் மற்றும் ஏா்கலப்பை உள்ளிட்ட விவசாய உபகரணங்களுடன் போராட்டத்துக்கு வந்தனா். அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை ஆட்சியா் அலுவலத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்தில், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆனந்த் காரல்மாா்க்ஸ், டைசன், ராபா்ட், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலா் அருள்சபிதா ரெக்ஸ்லின், தங்கம் நடேசன், தவசிமுத்து, அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT