நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் நேரிட்ட வெடி விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நாகா்கோவில் வடசேரியில் உள்ள பாா்வதி உடனுறை பரமேஸ்வரன் கோயிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தெற்கு ரதவீதி சந்திப்பில் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் பட்டாசு ஒன்று மேலே சென்று வெடிக்காமல் கீழேயே வெடித்தது. இதில் நாகா்கோவில் பிரைட்தெருவைச் சோ்ந்த ருக்மணி (78), கிருஷ்ணன்கோவில் முதலியாா் தெருவைச் சோ்ந்த லெட்சுமி (63), கோட்டாறைச் சோ்ந்த மற்றொரு லெட்சுமி (64), கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த கோகிலா(13) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஜவஹா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா். மேலும், விபத்து குறித்து வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அணில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.