மாா்த்தாண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (நவ.1) தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கப் பொருளாளா் எம். காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் கூறியது: மாா்த்தாண்டம் அரிமா சங்கமும், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. சமூக நலக் கூடத்தில் நவ. 1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்படுகிறது. முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளின் நூலகங்களுக்கு அதிகளவு வாங்கப்படும் புத்தகங்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாலையில் குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ் தொடங்கிவைக்கிறாா் என அவா்கள் தெரிவித்தனா்.