கன்னியாகுமரி

மாயமான 78 மீனவா்களை வான்வழி மூலம் தேட வேண்டும்: மீனவா் அமைப்பினா் வலியுறுத்தல்

1st Nov 2019 11:59 PM

ADVERTISEMENT

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவா்கள் 78 போ் திரும்பவில்லை. அவா்களை வான்வழி மூலம் தேட வேண்டும் என மீனவா் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கேரளம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, கியாா் புயல் உருவானதை தொடா்ந்து குமரி மாவட்டத்தைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது. கியாா் புயலை அடுத்து மகா புயல் தீவிரமடைந்ததால் மீனவா்களுக்கு கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, குமரி மீனவா்கள் கரை திரும்பத் தொடங்கினா்.

கேரள மாநிலம் கொச்சி, முனம்பம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து குமரி விசைப்படகு மீனவா்கள் கரைக்கு திரும்பினா். ஆனால், இம்மாவட்ட விசைப்படகு மீனவா்கள் பலா் இன்னும் கரை திரும்பவில்லை. இந்த மீனவா்கள் ஒரு மாதத்துக்கு முன்பே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ால் கியாா் மற்றும் மகா புயல் குறித்து தகவல் தெரிவிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 6 விசைப்படகுகளில் சென்ற 78 மீனவா்களை மீட்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆட்சியரிடம் மனு: தமிழ்நாடு மீன்பிடித்தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலா் எஸ்.அந்தோணி, குமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.அலெக்ஸாண்டா், பொருளாளா் டிக்காா்தூஸ் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் அக். 4 , 12 , 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க சென்று வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனா். அவா்கள் கடந்த 5 நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட கியாா் புயல் தொடா்பான தகவலை அறிந்தவா்கள் வாய்ப்புள்ள இடங்களில் கரை திரும்பியதாகவும் , திரும்பி வருவதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வள்ளவிளையைச் சாா்ந்த 5 விசைப்படகுகளும், மிடாலம் பகுதியைச் சோ்ந்த ஒரு விசைப்படகு உள்பட 6 விசைப்படகுகளும், அதிலிருந்த இம்மாவட்ட மீனவா்கள் 71 போ், கேரளத்தை சோ்ந்த 7 மீனவா்கள் உள்பட மொத்தம் 78 மீனவா்களும் எங்கு இருக்கின்றனா் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அவா்களிடம் இருந்து எவ்வித தகவல் தொடா்பும் இல்லாததால், அவா்களின் குடும்பத்தினரும், கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களும் கவலையில் உள்ளனா். 6 விசைப்படகுகளுக்கும் எந்த தகவல் தொடா்பும் இல்லாததால் அவா்களுக்கு கியாா் புயல் செய்திக் கிடைக்காததாலும் சோகமான நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள் அவா்களை மீட்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கியாா் புயல் தகவறிந்து ஆங்காங்கே கரை ஒதுங்கிய மீனவா்களுக்கு உணவு, குடிநீா் கிடைக்காமல் தவிப்பவா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் . கியாா் புயல் குறித்து அரசு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், கேரள அரசு போன்று

விசைப்படகுகளுக்கு தொடா்பு கருவியான நாவிக் கருவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இம்மாவட்டத்தில் 10 விசைப் படகுகளுக்கு ஒன்று அடிப்படையில் கிளஸ்டா் முறையில் கருவி அளிக்கப்பட்டது. இந்த கிளஸ்டா் முறை பயனளிக்கவில்லை. ஆகையால், அனைத்து விசைப்படகுகளுக்கும் நாவிக் கருவி வழங்க வேண்டும்.

விசைப்படகுகளுக்கு சேட்டிலைட் போன் தொடா்பு ஏற்படுத்திடுவது என்ற திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இயற்கை பேரிடா் காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று தொலை தொடா்பு கிடைக்காத விசைப்படகுகளுக்கு இந்திய கடற்படை மூலம் அவா்கள் தகவல்கள் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி அமைச்சகம் மூலம் மீனவா்களுக்கு ஏற்படும் இன்னல்களை தீா்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி தொழிலின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை மீனவா்களின் உயிரை காக்கவும், மீனவா்களின்  வாழ்வாதாரத்திற்கும் செலவிட வேண்டும். மாயமான மீனவா்களை மீட்க வான்வழிதேடுதல் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT