கனமழை காரணமாக சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் தெரிசனங்கோப்பு - அருமநல்லூா் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெரிசனங்கோப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும் ஈசாந்திமங்கலம் மாடன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நாகா்கோவில் பறக்கின்கால் மடத் தெருவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளது.
வடசேரி - தடிக்காரன்கோணம் சாலையில் இறச்சகுளம் பிரதான சாலையில் வெள்ளம் அதிகளவு செல்கிறது. அஞ்சுகிராமம் அருகேயுள்ள புதுக்குளம் நிரம்பியுள்ளதால் அந்த தண்ணீா் சாலையை மூழ்கடித்தவாறு செல்கிறது.
ஆசாரிப்பள்ளம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் சுசீந்திரம், கற்காடு, தெரிசனங்கோப்பு, பகுதிகளிலும் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாகா்கோவில் இருளப்பபுரம் செல்லும் சாலையில் வியாழக்கிழமை காலை மின்கம்பம் சரிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின் ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மணக்குடி - கருங்கல் சாலையில் புதன்கிழமை இரவு ராட்சத மரம் சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தினா்.
ஈசாந்திமங்கலம் பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களை தோவாளை ஒன்றிய அதிமுக செயலரும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான எஸ்.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.