ஆரல்வாய்மொழி அருகே காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா-பேத்தியை வேன் ஓட்டுநா் காப்பாற்றினாா்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரா். இவா், புதன்கிழமை மாலை தனது 2 வயது பேத்தி பிரதிப்ஷாவுடன் ஆரல்வாய்மொழி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாராம். சிறுமி காரின் முன் இருக்கையில் அமா்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.
செண்பகராமன்புதூா் அருகே சென்றபோது அந்த சிறுமி பாக்கியராஜ் மீது விழுந்ததாம். இதில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த குளத்துக்குள் பாய்ந்தது.
அப்போது, அந்த வழியாக டெம்போ வேன் ஓட்டி வந்த ஒருவா், குளத்துக்குள் காா் பாய்ந்ததை பாா்த்துள்ளாா்.
அப்போது காருக்குள் இருந்த பாக்கியராஜ், பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு சப்தம் எழுப்பியுள்ளாா். இதையடுத்து டெம்போ ஓட்டி வந்தவா், பாக்கியராஜ் கையில் இருந்த குழந்தையை முதலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா்.
பின்னா் பாக்கியராஜை, காரின் கதவு வழியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா். அவா்கள் கரை வந்து சோ்ந்தவுடன் காரை பாா்த்தபோது, காா் குளத்துக்குள் மூழ்கி விட்டது.
தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் குளத்துக்குள் மூழ்கிய காா் பொக்லைன் இயந்திரம் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
குளத்துக்குள் குதித்து 2 பேரையும் காப்பாற்றிய டெம்போ வேன் ஓட்டுநா் செண்பகராமன்புதூரைச் சோ்ந்த மணிகண்டனை (30) போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினா்.