குமரி மாவட்டம், தூத்தூர் தோமஸ் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவருக்கு சொந்தமான வள்ளத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அருளீஸ்(64), நீரோடி துறையைச் சேர்ந்த பெபின் (40), ராபின் (44), ஸ்டீபன் (55) ஆகிய 4 பேரும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 28 ஆம் தேதி மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
வள்ளவிளை அருகே எடப்பாடு பகுதியில் இவர்கள் திங்கள்கிழமை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கடலில் அமைக்கப்பட்டிருந்த அலை தடுப்புச்சுவரில் வள்ளம் மோதி கவிழ்ந்தது. இதில், மீனவர்கள் 4 பேரும் கடலில் தூக்கிவீசப்பட்டனர். கடல் அலையில் தத்தளித்த மீனவர்களில் அருளீஸ்
பாறைகளில் மோதி பலத்த காயம் அடைந்தார்.நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கவிழ்ந்த வள்ளத்தை சரிசெய்து, காயமடைந்த அருளீசை மீட்டு கரைக்கு கொண்டு வந்த பிற மீனவர்கள், அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருளீஸ் உயிரிழந்தார்.