பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் டாஸ்மாக் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் 16 ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்று அரசுப்பணி வழங்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்காலிகப் பணியாளர் களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்;
அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விற்பனை ஊக்கத் தொகை வழங்க வேண்டும்; டாஸ்மாக் கடைகளுக்கு வங்கிகள் நேரடியாக சென்று விற்பனைத் தொகையை பெற்றுச்செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் குமரி மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். இதில், அமைப்பின் நிர்வாகிகள் மோஸ்லின் பியர்சன், மணிகண்டன், ஞானசுந்தர், காமராஜ், பிரசாத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.