கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

29th Jul 2019 06:50 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து கேரள மாநிலப் பகுதிக்கு கஞ்சா கொண்டு சென்ற இளைஞர்கள் இருவரை களியக்காவிளை அருகே கேரள போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகே கேரளப் பகுதியான இஞ்சிவிளையில் சனிக்கிழமை பேருந்துக்கு காத்து நின்ற இரு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியினர் பாறசாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து இளைஞர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த பையை போலீஸார் சோதனையிட்டபோது, பையில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம், கொல்லம் மய்யநாடு பகுதியைச் சேர்ந்த சுதீஷ் (25), அல்தாப் (19) என்பதும், கம்பம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கிவிட்டு மதுரை வந்து அங்கிருந்து ரயிலில் பாறசாலை ரயில் நிலையம் வந்துள்ளதும், பின்னர் அருகே உள்ள இஞ்சிவிளை பகுதிக்கு வந்து பேருந்தில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும், இதுகுறித்து பாறசாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT