கன்னியாகுமரி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்: ஆக. 13 இல் தொடக்கம்

27th Jul 2019 09:32 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கான  சிறப்பு மருத்துவ முகாம்கள் வரும் ஆக. 13 ஆம் தேதி தொடங்கி  27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 3150 மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின்கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
மேலும் ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் மூலம் அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள், தேவையான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் பிறப்பு முதல் 18 வயதிற்கு உள்பட்ட மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு முறையான மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தல், அடையாள அட்டை வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யும் பொருட்டு 9 வட்டார வள மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில் குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், முடநீக்கியல் மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர் கலந்து கொள்கின்றனர். அதன்படி, வரும் ஆக. 13 ஆம் தேதி ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி,  ஆக. 14 ஆம் தேதி கடியப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆக.16 ஆம் தேதி மேல்புறம் அரசு மேல்நிலைப் பள்ளி, 19  ஆம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, 20 ஆம் தேதி திருவட்டாறு அரசு உயர்நிலைப் பள்ளி,  21 ஆம்  தேதி முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி, 22 ஆம் தேதி  நாகர்கோவில் அரசு எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப் பள்ளி, 26 ஆம் தேதி கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி, 27 ஆம் தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
மருத்துவ முகாம் காலை 10 முதல் பிற்பகல் 1  மணி வரை நடைபெறும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் முகாம் நடத்தப்படும். இதில், அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT