நாகர்கோவில் அருகே கால்வாய் கரையில் மின்மாற்றி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாகர்கோவிலை அடுத்த வைத்தியநாதபுரத்தில் பூதத்தான் கோயில் தெரு கால்வாய் கரையில் மின்மாற்றி அமைப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் முதல்கட்டமாக மின்கம்பங்கள் வியாழக்கிழமை நடப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்மாற்றி அமைப்பதற்காக வெள்ளிக்கிழமை காலை மின்சார வாரிய ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு கால்வாய் கரையில் மின்மாற்றி அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
கால்வாய் கரையில் மின்மாற்றி அமைத்தால் மழை நேரங்களில் அரிப்பு ஏற்பட்டு மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் கூறினர்.
மேலும் ஏற்கெனவே இப்பகுதியில் சாலையின் மறுபுறத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி மண் அரிப்பு காரணமாக சரிந்து விழும் அபாய நிலையில் இருப்பதையும் பொதுமக்கள் மின்ஊழியர்களை அழைத்துச் சென்று காட்டினர்.
இது குறித்து தகவலறிந்த கோட்டாறு போலீஸாரும் , மின்வாரிய உயர் அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கால்வாய்கரையில் மின்மாற்றி அமைத்தால் ஆபத்து ஏற்படும் என்று பொதுமக்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை, இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றி அமைக்காமல் திரும்பிச் சென்றனர்.