கன்னியாகுமரி

தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும்: சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தல்

27th Jul 2019 09:28 AM

ADVERTISEMENT

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிஐடியூ மாநாட்டில்  வலியுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ மாநாடு தக்கலையில் 3 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தொடக்க நிகழ்ச்சியில் மாநாட்டு கொடியை அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் சுகுமாரன் ஏற்றினார். தொடர்ந்து தியாகிகள் நினைவு  ஸ்தூபிக்கு  மலரஞ்சலி, தியாகிகள் நினைவு  சுடர்பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் சிங்காரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சந்திரபோஸ்  இரங்கல் தீர்மானம்  வாசித்தார். வரவேற்புக்குழுத்  தலைவர் ஜாண்ராஜ் வரவேற்றார்.  மாநாட்டை மாநில பொதுச்செயலர் ஜி. சுகுமாறன்  தொடங்கி வைத்தார். மாவட்ட ச்செயலர் கே. தங்கமோகனன், பொருளாளர் எம்.சித்ரா ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
பிரதிநிதிகள் விவாதம்,  தகுதி ஆய்வுக்குழு அறிக்கை, புதிய மாவட்டக்குழு தேர்வு,  மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வு ஆகியன நடைபெற்றன. 
மாநாட்டில், மாநிலச் செயலர் கே. ஆறுமுக நயினார், விவசாயிகள் சங்க மாவட்டச்செயலர் ரவி,  விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மலைவிளை பாசி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லீமாறோஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியூ  துணைத் தலைவர்கள்  பி.இந்திரா, எம்.வல்சகுமார், துணைச்செயலர் எஸ்.டி. ராஜ்குமார் ஆகியோர்  தீர்மானங்களை முன்மொழிந்தனர். 
தீர்மானங்கள்: தொழிலாளர்களின் ஊதியம், போனஸ் தொடர்பான  நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ரப்பர் ஆராய்ச்சி  நிலையம், ரப்பர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி மணல் ஆலையை  விரிவு படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தோவாளையில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.  கடல்சார் தொழிலில் கிடைக்கும்  மீன்களை பதப்படுத்தி, மீன்சார்  உணவு வகைகள் தயாரித்து அந்நிய செலாவணி ஈட்டும் வகையில்  பெரும் தொழிலகங்கள் அமைக்க வேண்டும். 
தென்னை நார் பயன்பாடு, அதை சார்ந்த மதிப்பு கூட்டுப்பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேலும், குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை  அகற்ற வேண்டும்.
நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்தவும், சுற்றுலா மூலம் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெட்ரோல்,  டீஸல் வரியை குறைத்து விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். 
ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செம்மைப் படுத்துவதோடு, வேலை நாள்களை 200 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் தினக்கூலியை ரூ.  400 ஆக உயர்த்த வேண்டும்.  பழங்குடி மக்களுக்கு எதிரான வனத் திருத்தச் சட்டம் - 2019 ஐ  திரும்பப்பெற வேண்டும். 
நீர் ஆதாரங்களை தூர் வாருவதுடன் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் அளவை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், மின் வாரியம் ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  
விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலை,  உயர் மின்கோபுரங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களை கைவிடவேண்டும். மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். 
தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறு.

ADVERTISEMENT
ADVERTISEMENT