கன்னியாகுமரி

"களியக்காவிளை அருகே சேதமடைந்த அரசு ஸ்தூபியை சீரமைக்க வேண்டும்'

27th Jul 2019 09:27 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே தமிழக- கேரள எல்லைப் பகுதியில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டு, வாகனம் மோதி சேதமடைந்த  ஸ்தூபியை சீரமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளார்.
களியக்காவிளை அருகே இரு மாநில எல்லைப் பகுதியில் சாலையின் ஒரு புறம் தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்ட ஸ்தூபியும் சாலையின் மறுபுறம்  அசோக தூணும்  தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பயணிகளை வரவேற்கும் வகையிலான வரவேற்பு பலகையும் அமைக்கப்பட்டிருந்தது.
   இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி காலையில் தமிழக அரசு சின்னம் பொருத்தப்பட்ட ஸ்தூபி உடைந்து கீழே சரிந்து காணப்பட்டது. ஸ்தூபியின் மேல் பொருத்தப்பட்டிருந்த காங்கிரீட்டால் ஆன தமிழக அரசு சின்னமும் உடைந்து கீழே  விழுந்துள்ளது.  
இது தொடர்பாக களியக்காவிளை போலீஸார் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதி இந்த ஸ்தூபி சேதமடைந்தது தெரியவந்தது. இச் சம்பவம் நடந்து 15 நாள்கள் கடந்தும் துறை அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேதமடைந்த அரசு ஸ்தூபி சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். விஜயதரணி வியாழக்கிழமை இப்பகுதிக்கு வந்து சேதமடைந்த அரசு ஸ்தூபியை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியது: இரு மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு ஸ்தூபி சேதமடைந்த 2 வாரங்கள் கடந்தும் இதை சீரமைக்க அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது வேதனையளிக்கிறது.  ஆகவே சேதமடைந்த  ஸ்தூபியை சீரமைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT