கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களை இணைக்க சாலை அமைக்க வேண்டும்; மத்திய அமைச்சரிடம் வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தல்

22nd Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஹெச்.வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தினார்.
இதுகுறித்து நிதின் கட்கரியை சந்தித்து அவர் அளித்த மனு: மார்த்தாண்டம் மேம்பாலத்துக்கு கீழே உள்ள இருதரப்பு அணுகு சாலைகளும் மிகக் குறுகிய அளவில் இருப்பதால் சிறு வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இந்தச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களையும், மீன்பிடித் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் கடற்கரைச் சாலை அமைக்கப்பட வேண்டும். மீனவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை செல்லும் கடற்கரைச் சாலை அமைக்கும் திட்டத்தைக் கட்டமைக்க வேண்டும்.
பன்றி வாய்க்காலின் குறுக்கே ராஜாக்கமங்கலத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும். மேல மணக்குடி-பள்ளம், முள்ளூர்துறை- தேங்காய்ப்பட்டினம் இடையே கற்களால் கடற்கரைச் சுவர்கள் எழுப்பப் பட வேண்டும்.
தடிக்காரன்கோணத்துக்கும், பாலமோருக்கும் இடையே பெருஞ்சாணி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கீரிப்பாறை, காளிகேசம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே இருந்த தரைப்பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், இப்பகுதி வாழ் மக்களும் மழை, வெள்ள காலங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே கிரீப்பாறை, காளிகேசத்தில் பாலங்கள் அமைக்க வேண்டும். 
வடசேரி - ஒழுகினசேரி சாலையை அகலப்படுத்துவதோடு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மத்தியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் மாநில அரசின் கண்காணிப்பில் உள்ள 31 சாலைகளைப் பராமரிக்க மத்திய சாலைப் பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.120.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT