கன்னியாகுமரி

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

19th Jul 2019 12:53 AM

ADVERTISEMENT


கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது: குமரி மாவட்டத்தில் பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததால் பாசனப் பரப்பு குறைந்துகொண்டே போகிறது. முக்கிய கால்வாய்கள் தூர்வாரப்படாததால் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையவில்லை. குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.  
100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை பயன்படுத்தி கிராமப்புற கால்வாய்களை தூர்வார வேண்டும். சுசீந்திரத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றனர்.
விவசாயிகளுக்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியது: சுசீந்திரம் நீர்நிலைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக கன்னிப்பூ பருவத்தில் 6,500 ஹெக்டேரில் சாகுபடி நடைபெறும். நிகழாண்டு 3,214 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கால்வாய்களை தூர்வாருவது மற்றும் மணல் அகற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தாமதம் ஆகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அகஸ்தீசுவரம், கல்குளம், தோவாளை, விளவங்கோடு, திருவட்டாறு, கிள்ளியூர் வட்டாட்சியர்களை அழைத்து, கடந்த மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண் எடுக்க அனுமதி கோரிய விவசாயிகளில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், குளங்களில் தூர்வாரியது,  நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது போன்ற விவரங்களையும் வட்டாட்சியர்கள் அடுத்த கூட்டத்துக்குள் அளிக்க வேண்டும்.
மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது என்றார்.  
பின்னர் ஆட்சியர் கூட்டத்தில் பேசியது: மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நீர்கசிவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மாத்தூர் தொட்டிப்பாலத்தில் காமராஜர் சிலை அமைப்பதற்கு யாராவது இடம் கொடுத்தால் அங்கு சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேச்சிப்பாறை அணையில் மணல் அள்ளுவதற்கு வனத்துறையின் ஒப்புதலை பெற வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க.குணபாலன், மண்டல இணை இயக்குநர் எஸ்.ஜோசப் சந்திரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.அசோக் மேக்ரின், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT