குலசேகரத்தில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குலசேகரம் பேரூராட்சிக்குள்பட்ட பொதுச்சந்தை மற்றும் நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பேரூராட்சி நிர்வாகத்தால் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இப்பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில், சந்தை சந்திப்பில் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் படிக்கட்டுகள், கூரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில் சில கடைகளின் உரிமையாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்றது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.