கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 18) காலை 11 மணிக்கு ஆட்சியரக நாஞ்சில் அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து முந்தைய கூட்டத்தில் பெற்ற விவசாயம் சார்ந்த மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும்.
மேலும், விவசாயம் சார்ந்த கோரிக்கை மனுக்களும் பெறப்படும். கோரிக்கை மனுவை பதிவு செய்து ஒப்புகை பெறும் வகையில்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பங்கேற்று விவசாயிகள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.