இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கடந்த ஆண்டு ஆக.31ஆம் தேதி இரவு கோயில் கருவறை பூட்டை உடைத்து ஐம்பொன்னால் ஆன மகாதேவரின் உத்சவ மூர்த்தி சிலை, திருமுகம், திருவாச்சி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இக்கோயில் சிலை திருட்டு வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் இப் போராட்டம் நடைபெற்றது. மேல்புறம் ஒன்றியத் தலைவர் ஆர். சந்திரசேகர் தலைமை வகித்தார். கோட்டச் செயலரும், குமரி மாவட்டத் தலைவருமான மிசா சி. சோமன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். ஒன்றிய பொதுச் செயலர் ராஜன், மாவட்டச் செயலர் ஆர். ரவி, மாவட்ட பொதுச் செயலர் ஆர்.கே. கண்ணன், மாநில முன்னாள் செயலர் சி. ராஜேஷ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் சி. செல்லன், வழக்குரைஞர் பிரிவு மாவட்டத் தலைவர் எல்.ஆர். பிரதீப் உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.