களியக்காவிளைஅருகே கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்த மீன் கழிவுகளை போலீஸார் கேரளத்துக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
கேரளத்தில் மீன், இறைச்சிக் கழிவுகளை நீர்நிலைகளின் அருகிலும், பொது இடங்களிலும் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்திலிருந்து கழிவுகளை லாரி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து வந்து குமரி மாவட்டத்தில் சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் கொட்டிச் செல்வது அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்து, கேரளத்திலிருந்து கழிவுகள் கொண்டு வருவது குறைந்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கேரளத்திலிருந்து மீன் கழிவுகளுடன் வந்த மினிலாரி திட்டங்கனாவிளை பகுதியில் பழுதாகி நின்றது. அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று மாற்று வாகனம் மூலம் கழிவுகளை கேரளத்துக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.