கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

12th Jul 2019 06:45 AM

ADVERTISEMENT

மார்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பறக்கும்படை தனி வட்டாட்சியர் என். சதானந்தன் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் சு. அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் அழகியமண்டபம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினர்.
கார் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் சுமார் 15 கி.மீ. தொலைவு துரத்திச் சென்று மார்த்தாண்டம் அருகே காரை மடக்கிப் பிடித்தனர். கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 
தொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது, அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், காரை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT