கன்னியாகுமரி மாவட்ட அளவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளை வழங்கி ஆட்சியர் பேசியது: அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் பணிபுரிந்தாலும், விளையாட்டுப் போட்டிகளில் மிக குறைவானவர்களே கலந்து கொள்கின்றனர். வரும் காலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாள்களில் மட்டும் அறிஞர்அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வராமல், தொடர்ந்து பயிற்சி செய்வதற்காக இங்கு வர வேண்டும்.
தற்போது நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறமுடியாத விளையாட்டு வீரர்கள், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டு. விளையாட்டில் பங்குபெறாத அரசுத்துறை அலுவலர்களும், ஊழியர்களும் செப்டம்பர் மாதம் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
செப்டம்பர் மாதம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கு கொள்ள வேண்டும்.
அப்போது நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது நிர்ணயம் செய்து, துறை வாரியாக குழு அமைத்து பல்வேறு விதமான புதிய போட்டிகளும் நடத்தப்படும். எனவே, வரும் காலங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் அனைத்து துறைகளும் பங்குபெற்று, துறை வாரியாக போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் சரண்யா அரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)மா.சுகன்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், பொதுமேலாளர்(ஆவின்) தியானேஷ்பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் கே.சரவணகுமார் உள்பட அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.