மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
குழித்துறை அருகே திருத்துவபுரம் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுபிள்ளை மகன் சத்தியராஜ் (42). கூலித் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை இரவு கழுவன்திட்டை பகுதியிலிருந்து ஞாறான்விளை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
கப்பத்தான்விளை பகுதியில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாராம்.
இதையடுத்து அவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.