கன்னியாகுமரி

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது: உ. வாசுகி

6th Jul 2019 01:34 AM

ADVERTISEMENT

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றார் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி. 
இந்த சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
குமரி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் உள்ளூர் போலீஸார் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். 
குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும்.
மத்திய அரசு உத்தரவின்படி, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம்தோறும் கூட்டம் நடத்தி, விவாதித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூடவேண்டும். 
குற்றச் செயல்கள் நடைபெற்றால் ஜாதி, மதம் பார்க்காமல் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச் செயலில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்தி, அவர்களை வெற்றிபெறச் செய்து, அவர்களையே குற்றங்களுக்கு எதிராக சட்டம் இயற்றும் இடத்துக்கு அனுப்பிவைப்பதன் மூலம், குற்றச் செயல்களுக்கு நியாயம் கிடைக்காது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டத் தலைவர் மேரிஸ்டெல்லாபாய் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், ரகுபதி, டெல்பின், சாந்தி, புனிதா, மேரிஎஸ்தர்ராணி, சுமங்கலா, பேபி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT