கன்னியாகுமரி

குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் மனு

2nd Jul 2019 06:24 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம், பனவிளை, கல்லுகுட்டிவிளை, பெருமாவிளை, வாழவிளை, காஞ்சிராவிளை, கோழிப்போர்விளை, அமராவதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாஜக மாநிலத்துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து  செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். முளகுமூடு அருகே முகமத்தூர் பகுதியைச் சேர்ந்த பைந்தாங்கிகுளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
குவிந்த மனுக்கள்: வாள் சண்டை வீரர் டேவிட்ராஜ் அளித்த மனு: 2017 இல் நடைபெற்ற பேருந்து மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது திருவட்டாறு போலீஸார் வழக்கு பதிந்தனர். தற்போது இவ்வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மறியல் நடைபெற்ற நாளில், வெளியூரில் இருந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், கல்வி உதவி,  பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகை  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் வழங்கக் கோரி பெறப்பட்ட 470  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இதில், உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பா.ஜெயராணி, அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிறுவனத்துக்கு காஞ்சிபுரம், கேரளத்தில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 66 தவணைகள் செலுத்தினால், தவணை முடியும்போது ரூ. 30 ஆயிரம் கூடுதலாக சேர்த்து ரூ. 96 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பணம் செலுத்தினராம்.
இந்நிலையில் முதிர்வடைந்த வாடிக்கையாளர்களுக்கு 2018 முதல் தொகையினை திரும்ப அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களை தெரிவித்து வாடிக்கையாளர்களுக்கு இந்நிதி நிறுவனம் பணம் கொடுக்காமல் அலைக்கழித்ததாக  கூறப்படுகிறது. ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய காசோலையும் மேற்படி நிறுவனத்தின் கணக்கில்  பணம் இல்லாமல் திரும்ப வந்ததாம். 
இதனிடையே, கேரளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட  வாடிக்கையாளர்கள் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்டனர். பொதுமக்களின் பணத்தை வழங்காமல் ஏமாற்றி வரும் தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவை  சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT