நாகா்கோவிலில் பூக்கடையில் வேலை செய்து வந்த ஊழியா் கடையில் இருந்து பணம் திருடியது தொடா்பாக சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் வடசேரி அசம்பு சாலை பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (73). இவா்,வடசேரியில் பூக்கடை நடத்தி வருகி
றாா். இதனிடையே கடந்த சில மாதங்களாக கடையில் வியாபாரம் நடைபெற்ற போதிலும் பணம் இல்லை என கூறப்படுகிறது. இதனை கண்காணிக்கும் வகையில் ஊழியா்களுக்கு தெரியாமல் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடையில் பணி செய்து வந்த தோவாளை பகுதியைச் சோ்ந்த மணி என்ற வீரபத்திரன் பணத்தை தொடா்ந்து திருடி வருவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் மணி என்ற வீரபத்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் தேடுவதை அறிந்த மணி என்ற வீரபத்திரன் தலைமறைவானாா். வடசேரி போலீசாா் தேடி வருகின்றனா்.