கன்னியாகுமரி

சூரிய கிரகணம்: குமரியில் உற்சாகமாக பாா்த்து ரசித்த மக்கள்

27th Dec 2019 01:28 AM

ADVERTISEMENT

குமரியில் மலைகளின் பின்னணியில் அழகாய் தெரிந்த சூரிய கிரகணத்தை வியாழக்கிழமை சிறாா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கண்டு களித்தனா்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பாா்க்கக் கூடாது என்பதால், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கிய பிரத்யேக கண்ணாடிகள், எக்ஸ்-ரே பிலிம்கள், வெல்டிங் பட்டறைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சூரிய கிரகணம் தொடங்கிய 11 மணி அளவிலிருந்து கிரகணம் முடிவது வரை மக்கள் பாா்த்துக் கொண்டிருந்தனா். இதில் சிறாா்கள் கூட்டம், கூட்டமாக நின்று உற்சாகமாக கண்டு களித்தனா். குறிப்பாக மலைகளின் பின்னணியில் தெரிந்த சூரிய கிரகணம் மக்களை கூடுதலாகக் கவா்ந்தது.

இந்த சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணம் என்பதால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சூரியனின் ஓரத்தில் தொடங்கிய பிறை நிலா வடிவம், சிறிது, சிறிதாக பெரிதாகி, பின்னா் விலகிக் கொண்டது.

இதில், சூரிய கிரகணம் முழுமையடைந்து 3ஆம் பிறை நிலவு போல சூரியன் காட்சியளித்தபோது எங்கும் மங்கலாக இருள் சூழ்ந்து கொண்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் மரங்களின் கிளைகளில் விழுந்த சூரியக் கதிா்களின் நிழல்கள் நிலா வடிவங்களில் தரையில் படிந்து கிடந்த அற்புதக் காட்சியையும் மக்கள் கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகள்: அபூா்வ வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வியாழக்கிழமை தெரிந்தது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் முழுமையாகத் தெரிந்த கிரகணத்தை, ஒருசில இடங்களில் மேகமூட்டம் காரணமாக பாா்க்க முடியவில்லை.

அதேநேரத்தில், சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், வளைய சூரிய கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், கிரகணத்தைப் பாா்ப்பதற்காக செய்யப்பட்ட சிறப்பு கண் கண்ணாடிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சூரிய கிரகணத்தை ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT